பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி; இந்திய ராணுவ கமாண்டர்களுக்கு முழு அதிகாரம்

புதுடில்லி: போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என்று இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கியது. இதில், பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே போர் மூண்டது. பாகிஸ்தானின் அனைத்து விதமான தாக்குதல்களையும் முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது.


இதனால், இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்த சூழலில், பாகிஸ்தான் ராணுவ டி.ஜி.எம்.ஓ., போர் நிறுத்தம் செய்வதற்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் இந்தியாவும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது.


நேற்று மாலை முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. எனினும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தியது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


இந்த நிலையில், இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள கமாண்டர்களுடன் தலைமை தளபதி உபேந்திர திவேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என்று ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டார்.


முன்னதாக, பயங்கரவாதிகளை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் தாக்குதல் நடத்தினாலோ, துப்பாக்கிச்சூடு நடத்தினாலே பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.எம்.ஓ., இன்று செய்தியாளர்களை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement