கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ஏழை பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ்

8

சென்னை: திருப்புவனம் அருகே கிளாதிரியில் கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 1லட்சம் நிதியுதவி வழங்கினார்.


சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கிளாதிரி கக்கனாம்பட்டி குமார் மனைவி முத்துக்கருப்பி 30. இவருக்கு 2 மகள்கள், மகன் உள்ளனர். தினக்கூலியாக வேலை பார்த்து வரும் இவர், கூரை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது மகள்களின் காதணி விழா செலவிற்காக தினமும் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை தகர உண்டியலில் போட்டு மண்ணிற்குள் புதைத்து வைத்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் பணத்தை எடுத்து எண்ணியுள்ளார். அப்போது ஒரு லட்ச ரூபாய் வரை இருந்துள்ளது. தொடர்ந்து மழையின் காரணமாக தகர பெட்டிக்குள் கரையான்கள் புகுந்து, ரூபாய் நோட்டுக்களை அரித்துள்ளன.


இதனால் தகர பெட்டியில் இருந்த ரூ.500, 200, 50, 20 நோட்டுக்கள் அரிக்கப்பட்டு கிடந்தன. ஒரு ஆண்டிற்கு மேலாக உண்டியலில் சேமித்த ரூ.1 லட்சத்தை கரையான் அரித்ததால், பணத்தை இழந்து குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புலம்பி தவித்தார். இது குறித்து அறிந்த சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், சிவகங்கை தாசில்தார் சிவராமனிடம் தெரிவித்து, முன்னோடி வங்கி மூலம் ரிசர்வ் வங்கியிடம் கருணை அடிப்படையில் பணத்தை பெற்றுத்தர முயற்சிக்க கூறினார். வங்கியினரும், பணத்தை பெற்றுத் தர உதவி செய்வதாக கூறியிருந்தனர்.



இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், முத்துக்கருப்பி மற்றும் அவரது குடும்பத்தினரை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து ரூ. 1லட்சம் வழங்கி உதவினார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார். நிதியுதவி செய்த ராகவா லாரன்சுக்கு, முத்துக்கருப்பி நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement