பாப்பிரெட்டிப்பட்டியில் மஞ்சள் ஏல மையம் தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல்


பாப்பிரெட்டிப்பட்டி,

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், மஞ்சள் ஏல மையம் தொடங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மஞ்சள் அறுவடை பணி நடந்து வருகிறது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, வாணியாறு, வள்ளிமதுரை பகுதிகளில் அதிகளவில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் விளைவிக்கப்படும், 5,000க்கும் மேற்பட்ட குவிண்டால் விரலி மற்றும் குண்டு மஞ்சள், தோல் மஞ்சள் ரகங்கள் சேலம், ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரூர் பகுதியில், ஏற்கனவே ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலமாக, பருத்தி ஏலம் நடந்து வருகிறது. அதே போல் மஞ்சள் சீசனில் மஞ்சள் ஏலமும் நடத்தப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும், மூன்றில் 1 பங்கு மட்டுமே இரு மையங்களுக்கும் மஞ்சள் வரத்தாகிறது. பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார், பொம்மிடி பகுதி விவசாயிகள் அரூர் மையங்களுக்கு செல்வதை விட ஈரோடு, சேலம் பகுதிகளுக்கே, மஞ்சள் கொண்டு செல்வதை விரும்புகின்றனர்.
இந்நிலையில் அரூரில் உள்ளது போல, பாப்பிரெட்டிப்பட்டியிலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மஞ்சள் ஏல மையம், மஞ்சள் பாலிஸ் மையம் மற்றும் பாய்லர் உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயி சங்கர் கூறியதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மஞ்சள் ஏல மையம் அமைத்திட வேண்டும். வியாபாரிகளை வரவழைக்கவும், உத்தரவாதமான விலை கிடைக்கவும், மஞ்சள் மூட்டைகளை பாதுகாக்க போதிய கூடங்கள், விவசாயிகளுக்கான ஓய்வறை வசதிகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்திட வேண்டும். இது தவிர மஞ்சள் பாலிஸ் செய்யும் மையம் அமைத்திட வேண்டும். இதன் மூலம் வெளியூர் செல்லும் விவசாயிகளை தடுக்க முடியும்.
இவ்வாறு கூறினார்.

Advertisement