பாக்., தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம்!

புதுடில்லி: பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க முயன்றாலும், அதனை இந்திய ராணுவம் எஸ் 400 பாதுகாப்பு கவசம் மற்றும் ஹாரோப் டுரோன் மூலம் முறியடித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் ஏவுகணைகளை வீசி தாக்கி அழிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எல்லையில் அமைந்துள்ள நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயற்சித்தது.
ஆனால், எல்லையில் விழிப்புடன் இருந்த நமது ராணுவத்தினர் பாகிஸ்தான் ஏவுகணைகளை உடனடியாக தாக்கி அழித்தனர். மேலும் இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் வான்பாதுகாப்பு கவசம் செயலிழந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலை முறியடிக்க ஹாரோப் டிரோன் மற்றும் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசத்தை இந்திய ராணுவம் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
ஹாரோப் ட்ரோன்
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த டிரோன்களில் வெடிபொருட்களை கொண்டு செல்ல முடியும். ரேடாரில் சிக்காத வகையில் சென்று இலக்குகளை தானாகவே தாக்கும் வல்லமை பெற்றது இந்த ட்ரோன்.
இரவு மற்றும் பகல் நேரத்தில் 9 மணி நேரம் பயணித்து சர்வதேச நேவிகேசன் செயற்கைகோள் உதவியுடன் அனைத்து பருவநிலைகளிலும் செயல்படும் வகையில் இந்த ட்ரோன் தயாரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட இலக்குகளை கண்டறிந்து, எந்த திசையில் இருந்தும் சென்று தாக்கும் திறன் இந்த டிரோன்களுக்கு உண்டு.
எஸ் 400 பாதுகாப்பு கவசம்!
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் இந்த எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு மூலம் அழிக்கப்பட்டது. ரஷ்யா வடிவமைத்துள்ள அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம், இந்தியாவில் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாகனம் 600 கி.மீ., தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளையும் கண்காணிக்கும். அதேபோல் 400 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை இடைமறித்து அழிக்கவும் முடியும்.
ஐந்து எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா ரஷ்யா இடையே ரூ.35 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் 3 அமைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சிய 2 அமைப்புகள், 2026க்குள் வழங்கப்படும். உக்ரைன் போர் காரணமாக இவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.
தற்போது இந்தியாவிடம் உள்ள இந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகளை விமானப்படை பயன்படுத்தி வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இவை நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
