பஸ்சில் கடத்திய ரூ.1.66 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

பாலக்காடு:பாலக்காடு அருகே, பஸ்சில் ஆவணங்களின்றி கடத்தி வந்த, 1.66 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலை வாளையார் அட்டப்பள்ளம் சுங்கச்சாவடி அருகே, நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் அஜய்குமார் தலைமையில், பாலக்காடு பிரிவு கலால் துறையினர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, கோவையில் இருந்து, கொச்சி நோக்கி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி நடத்திய சோதனையில், பயணி ஒருவர் பேக்கில் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், ஆந்திரா மாநிலம் கர்ணூல் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி கசூலா, 52, என்பதும், ஆவணங்களின்றி 1.66 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், தங்க வியாபாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் இருந்து கொச்சிக்கு பணத்தை கொண்டு செல்வதும் தெரிந்தது. அவரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்த கலால் துறையினர், தொடர் விசாரணைக்காக வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

Advertisement