கறையான் அரித்து ரூ.1 லட்சம் இழந்த பெண்ணுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதி

பூவந்தி:சிவகங்கை மாவட்டம், கக்னாம்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துகருப்பி, 3௦ கணவர், இரண்டு மகள்கள், மகனுடன் குடிசை வீட்டில் வசிக்கிறார்.

மகளின் காதணி விழாவிற்காக, சிறுக சிறுக சேமித்த பணம் முழுவதையும், 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றி, தகர பெட்டியில் வைத்து, வீட்டினுள் குழிதோண்டி புதைத்து வைத்திருந்தார்.

மழை காரணமாக, கறையான் தகரத்தை அரித்து, ரூபாய் நோட்டுகளையும் அரித்துள்ளது.

இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைப்பார்த்த நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், முத்துகருப்பி குடும்பத்தினரை, சென்னையில் தன் வீட்டிற்கு வரவழைத்தார்.

அங்கு, 'ராகவேந்திரா சிலை காலடியில் உள்ள பெட்டியில், உங்களுக்கு தேவையானது உள்ளது; எடுத்து கொள்ளுங்கள்' என, கூறியுள்ளார்.

அதை எடுத்துப் பார்த்த போது, 1 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அதை, ராகவா லாரன்ஸ் கையால் கொடுக்குமாறு, முத்துக்கருப்பி குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதையடுத்து, அவரும் கொடுத்தார். அவர்கள், கண்ணீருடன் நன்றி சொல்லி, பணத்தை பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், முத்துகருப்பிக்கு பணத்தை மாற்றித்தர, சிவகங்கை வங்கி வாயிலாக, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரிசர்வ் வங்கி பிரதிநிதிகள் நேரில் வந்து விசாரித்து, நடந்தது உண்மை என்றால் பணத்தை மாற்றித்தர நடவடிக்கை எடுப்பர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement