அடாவடி ஆட்டோ ஓட்டுனர் கைது

பெரம்பூர், சூளையை சேர்ந்தவர் சுவாதி, 23. இவரது கணவர் அருண்குமார், 27 என்பவர், குற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று காலை சுவாதி சென்றார். உறவினர்களான சுமித்ரா, ஸ்நேகா ஆகியோருடன் பட்டாளத்தில் இருந்து அயனாவரத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன், 31 என்பவரின் ஆட்டோவில் ஏறியுள்ளனர்.

தாறுமாறாக ஓட்டியதால் பயந்த சுவாதி உள்ளிட்டோர், பெரம்பூரில் ஆட்டோவை நிறுத்தி இறங்கினர். ஓட்டுனருக்கு 80 ரூபாயை கொடுத்து விட்டு, வேறு ஆட்டோவில் ஏற முற்பட்டனர்.

இதனால், ஆட்டோ ஓட்டுனருக்கும், சுமித்ரா தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுவாதியிடமிருந்த மொபைல்போன் மற்றும் பணத்தை திடீரென பிடுங்கிய ஆட்டோ ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து செம்பியம் காவல்நிலையத்தில் சுவாதி புகார் அளித்தார். ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போலீசார், ஓட்டுனர் கோட்டீஸ்வரனை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து மொபைல்போன் மற்றும் 800 ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement