எடையாளம் ஆற்றில் குப்பை குவிப்பு மர்ம நபர்கள் தீ வைப்பதால் சீர்கேடு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்திலிருந்து தொழுப்பேடு, ஒரத்தி வழியாக வந்தவாசி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில் பாபுராயன் பேட்டை, எலப்பாக்கம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் எடையாளம் ஆற்றில் கலந்து, ஓங்கூர் ஆற்றில் சென்று, கடலில் கலக்கிறது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுபாக்கம், அறப்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் அதிக உணவகங்கள் செயல்படுகின்றன.
இந்த உணவகங்களின் கழிவுகள், கருப்பு நிற பாலித்தீன் பைகளில் மூட்டையாக கட்டப்பட்டு, வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, எடையாளம் ஆற்றங்கரை பகுதியில் வீசப்படுகின்றன.
பின், மர்ம நபர்கள், அவற்றை தீயிட்டுக் கொளுத்தி விடுகின்றனர்.
இதனால், சாலையில் செல்வோர் மூச்சுத் திணறல், சுவாச பிரச்னைக்கு உள்ளாகின்றனர்.
மேலும், உணவுக் கழிவுகளை உண்பதற்காக சுற்றித் திரியும் காட்டுப் பன்றிகள் மற்றும் நாய் உள்ளிட்டவை சாலையைக் கடக்கும் போது, இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவற்றின் மீது மோதி, கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
எனவே, எடையாளம் ஆற்றங்கரை பகுதியில் குப்பை மற்றும் உணவுக் கழிவுகள் கொட்டும் மர்ம நபர்களை கண்டறிந்து, கடும் அபராதம் விதிக்க வேண்டும்.
நீர் நிலைகளை அசுத்தம் செய்யும் நபர்கள் மீதும், உணவகங்கள் மீதும் ஊராட்சி, ஒன்றிய, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.