விபத்தில் மேலும் ஒரு பெண் பலி

தேவதானப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு டம்டம்பாறை அருகே, பாறையில் வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

மதுரை விளாச்சேரியை சேர்ந்த, குலாம் அர்ஷத் குடும்பத்தினர், வேனில் கொடைக்கானல் சென்று விட்டு மே 5 இரவில் மதுரை புறப்பட்டனர். டிரைவர் மொக்கச்சாமி வேன் ஓட்டினார்.

டம்டம் பாறை அருகே வந்த போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அனைவருக்கும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், ஜீன்னத்பேகம் என்பவர் மே 6ல் இறந்தார். அவரது மகள் ஷிகரத்துல் முன்தஹா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement