இந்தியாவில் கால் பதிக்கிறது அமெரிக்க பல்கலைக்கழகம்

புதுடில்லி : அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலை, மஹாராஷ்டிராவின் மும்பையில் அடுத்தாண்டு அமையவிருக்கிறது.


அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரத்தில் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப பல்கலை செயல்பட்டு வருகிறது. அர்பானா - சாம்பாய்ன் பெருநகரத்தில் அமைந்துள்ள இந்த பல்கலையின் கீழ், 15க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் செயல்படுகின்றன.

கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்று, அங்கு ஏராளமான மாணவர்கள பயின்று வருகின்றனர்.

இந்த பல்கலையின் புதிய வளாகம், நம் நாட்டில் அமையவிருக்கிறது. இதற்கான ஒப்புதலை யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு அளித்துள்ளது. இதையடுத்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் இல்லினாய்ஸ் பல்கலையின் புதிய வளாகம் அமைய உள்ளது.

நம் நாட்டில் முதன்முறையாக அமையும் அமெரிக்க பல்கலை இது. அடுத்தாண்டு துவங்கப்படும் இந்திய வளாகத்தில் கணினி அறிவியல், பொறியியல், வணிகம் ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து இல்லினாய்ஸ் தொழில்நுட்ப நிறுவன தலைவர் ராஜ் எச்சம்பாடி கூறுகையில், ''பழமையான, புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பல்கலையின் புதிய வளாகத்தை இந்தியாவில் அமைப்பது பெருமையாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இல்லினாய்ஸ் பல்கலையை இந்திய மாணவர்கள் 73 சதவீதத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்துஉள்ளனர்.

''இதுவே, நாங்கள் இந்தியாவில் கால் பதிப்பதற்கான நோக்கம். இந்த புதிய வளாகத்தால், இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் அங்கேயே கல்வி பயில்வதற்கு எளிதாக இருக்கும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும்,'' என்றார்.

Advertisement