மருத்துவமனை டெண்டர் மாற்றம் கூடுதலாக 300 பணியாளர்கள்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கிறிஸ்டல் நிறுவனம் மூலம் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது சுமீட் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் மாற்றப்பட்டுள்ளது.

மருத்துவமனை பழைய வளாகம், தீவிர விபத்து பிரிவு, பல்நோக்கு சிறப்பு பிரிவு மற்றும் பாலரெங்காபுரம் புற்றுநோய் மண்டல மையத்தில் கிறிஸ்டல் நிறுவனம் மூலம் துாய்மைப்பணி, செக்யூரிட்டி, சூப்பர்வைசர் பணியிடங்களில் 706 பேர் தினக்கூலி பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது துாய்மைப்பணிக்கான டெண்டர் சுமீட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் டீன் அருள் சுந்தரேஷ்குமார், ஆர்.எம்.ஓ., சரவணன், நிறுவன பொதுமேலாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டனர்.

ஒன்றரை ஆண்டுக்கு முன் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்க வளாக(ஜெய்கா) கட்டடத்திற்கு தனியாக துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கவில்லை.

தற்போது 130 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே உள்ள வளாகங்களில் 706 பேர் உள்ள நிலையில் கூடுதலாக 164 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், வாகனங்களை கண்காணித்தல், துாய்மைப்பணிகள் தொய்வின்றி நடைபெறும்.

Advertisement