லாரியின் டயர் வெடித்து எதிர் வந்த லாரி மீது மோதியது

கள்ளிக்குடி: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற லாரியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ரோடு தடுப்பை தாண்டி எதிர் திசையில் வந்த மற்றொரு லாரி மீது மோதியதில் டிரைவர் பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம் குன்னுவராயன் பேட்டையைச் சேர்ந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன் 30, நேற்று மதியம் விருதுநகருக்கு வீடு கட்டுமான பணிகளுக்கான கம்பிகளை லாரியில் ஏற்றிச்சென்றார்.

கள்ளிக்குடி தாலுகா ஆவல் சூரன்பட்டி அருகே சென்ற போது லாரியின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியன் தடுப்புச் சுவரில் மோதி எதிர் திசையில் விருதுநகரில் இருந்து மதுரை வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில் டிரைவர் கோபாலகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார்.

அவரை கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள், போலீசார், நெடுஞ்சாலை விபத்து மீட்புக் குழுவினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் பலியானார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement