சோலாருக்கு நெட்வொர்க் கட்டணம்: தொழில்துறையினர் அதிருப்தி

கோவை : மேற்கூரை சோலார் நெட்வொர்க் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் தொடர்ந்து கட்டணத்தை வசூலித்து வருகிறது. இதனால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறியதாவது:
தமிழகத்தில் 2022 முதல், தொடர்ச்சியாக மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது. வேறு மாநிலங்களில் இல்லாத வகையில், தொழிற்சாலை மேற்கூரையில் சோலார் நிறுவி, மின் உற்பத்தி செய்தால், ஒவ்வொரு யூனிட்டுக்கும் நெட்வொர்க் கட்டணமாக சராசரியாக ரூ.1 வசூலிக்கப்படுகிறது.
இதை ரத்து செய்ய வலியுறுத்தி, தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. மேலும் சில அமைப்புகளும், தனி நபர்களும் வழக்கு தொடுத்தனர்.கடந்த 2024 டிச., 20ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சிஸ்பா உட்பட அனைத்து ரிட் மனுக்களையும் ஏற்று, நெட்வொர்க் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு மின்வினியோகக் கழகம், கடந்த ஏப்., மாதத்தில் மட்டும் உயர் அழுத்த மின் நுகர்வோரிடம் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கவில்லை. தாழ்வழுத்த மின் நுகர்வோரிடம் வசூலித்தது. முறையிட்டதை அடுத்து, அக்கட்டணம் கழிக்கப்பட்டது.
இந்த சூழலில், மின்வாரியம் சார்பில், கோவை சிவசுப்பிரமணியா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஒரு ஆலைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த முறையீட்டில், அந்த ஆலைக்கு எதிராக மட்டும் இடைக்கால தடையை மின்வாரியம் பெற்றது.
இந்த உத்தரவைப் பயன்படுத்தி, அனைவரிடமும் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்க, மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.
தொழில்துறையில் முன்னணியில் உள்ள மாநிலங்களில், மின் கட்டணம் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும்தான், மின்கட்டணமும் இதர கட்டணமும் உயர்த்தப்பட்டு, மேற்கூரை சோலாருக்கும் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கின்றனர். இது தொழில்துறையை நசுக்கும் செயல். முதல்வர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
“கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, மின்துறையை சரியாகக் கவனிக்காததால்தான், ஆட்சியையே இழக்க நேரிட்டது. தற்போது இதே மின்வாரியத்தால், தொழில்துறையினர் மத்தியில், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஒரே ஒரு மனு மீது இடைக்காலத் தடை பெற்றுவிட்டு, அனைத்து நுகர்வோரிடமும் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்க உத்தரவிடுவது நியாயமற்றது. எங்கள் கோரிக்கையையும் ஏற்பதில்லை, கோர்ட் உத்தரவையும் மதிப்பதில்லை என்றால், மின் வாரியம் முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லையா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை” என, தொழில்துறையினர் கொந்தளித்துள்ளனர்.




மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி