ரோஜா பூங்காவில் இரண்டு லட்சம் மலர்களில் கடல் வாழ் உயிரின உருவங்கள்; ஊட்டியில் நாளை கண்காட்சி துவக்கம்

ஊட்டி; ஊட்டி ரோஜா பூங்காவில், 20வது ரோஜா கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, 2 லட்சம் ரோஜாக்களை கொண்டு டால்பின் உருவம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஊட்டியில் கோடை விழா முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா நிகழ்ச்சி துவங்கியது. இதை தொடர்ந்து, ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில், 20வது ரோஜா கண்காட்சி, 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. ரோஜா கண்காட்சியை ஒட்டி பூங்காவில், 4.000 வகைகளில், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல வண்ண ரோஜா செடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

தவிர, ஆண்டுதோறும் ரோஜா கண்காட்சியின் போது, சிறப்பு அம்சமாக ஏதாவது ஒரு பொருளை மையப்படுத்தி அது குறித்தான உருவங்கள் பூங்கா வளாகத்திற்குள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இம்முறை, 'டால்பின்' உருவம் மலர்களால் உருவாக்கப்படுகிறது.

ரோஜா பூங்கா உதவி இயக்குனர் பைசல் கூறுகையில், ''நடப்பாண்டின், 20 வது ரோஜா கண்காட்சியில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க பூங்காவில் ரோஜா மலர்கள் தயார் நிலையில் உள்ளன. அதில், சிறப்பு அம்சமாக கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில், 2 லட்சம் ரோஜா மலர்களால் டால்பின், ஆமை, நட்சத்திர மீன் உட்பட நீர் வாழ் உயிரினகளின் உருவம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்,'' என்றார்.

Advertisement