'காட்டு யானைகளை விரட்டும் பணி தொடரும்'; மக்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பந்தலுார்; 'பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி தொடரும்,' என, ஆலோசனை கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை பகுதியில், பஜார் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி தனியார் எஸ்டேட்டிற்கு சொந்தமான வனப்பகுதி அமைந்துள்ளது. சமீப காலமாக யானைகள் முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. சில நேரங்களில் இரவில் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நெலாக்கோட்டையில் நடந்தது.
வனச்சரகர் ரவி வரவேற்றார். வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து பேசுகையில், ''கூடலுார் கோட்டத்தில், 80 யானைகள் உள்ள நிலையில் இதனை கண்காணிக்கும் பணியாளர்கள் குறைவாக உள்ளனர். எனினும் தற்போது உள்ள பணியாளர்கள், 24 மணி நேரமும் உறக்கம் இழந்து மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.
பொதுமக்கள் வனத்துறையுடன் இணைந்து செயலாற்றினால் மட்டுமே இது போன்ற வனவிலங்கு மனித மோதல்களை ஓரளவுக்கு தடுக்க இயலும்.
தற்போது, மக்கள் குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டுள்ள யானைகளை துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.எம்.எல்.ஏ., ஜெயசீலன் பேசுகையில், ''கிராமங்களுக்கு யானைகள் வருவதை தடுக்கும் வகையில், அகழி அகலப்படுத்துவது, சோலார் மின்வேலி அமைக்க வனத்துறை முன் வர வேண்டும்,'' என்றார்.
சமூக ஆர்வலர் அசோக் கூறுகையில், ''வனத்துறை பணியாளர்களை இணைந்து புதர்களை அகற்றுவது மற்றும் யானை துரத்தும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உணவு வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார். வனவர் பெலிக்ஸ் நன்றி கூறினார்.
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி