வில்வித்தை: அரையிறுதியில் தீபிகா

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை அரையிறுதிக்கு இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சுஷாந்த் முன்னேறினர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 நடக்கிறது. ரிகர்வ் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பார்த் சுஷாந்த், காலிறுதியில் தென் கொரியாவின் கிம் ஜே தியோக்கை சந்தித்தார். இதில், சுஷாந்த், 6-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அடானு தாஸ், 2-6 என தென் கொரிய வீரர் கிம் ஊஜினிடம் தோல்வியடைந்தார். அரையிறுதியில் சுஷாந்த்-ஊஜின் மோத உள்ளனர்.
தீபிகா அபாரம்
பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, சீனாவின் லி ஜியாமனை எதிர்கொண்டார். இதில் அசத்திய தீபிகா குமாரி 6-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் தென் கொரியாவின் லிம் ஷியோனை சந்திக்க உள்ளார்.
கலப்பு அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக், மதுரா ஜோடி, 156-158 என்ற கணக்கில் பிரிட்டனின் எல்லா கிப்சன், அஜய் ஸ்காட் ஜோடியிடம் வீழ்ந்தது. அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, இன்று மலேசியாவை சந்திக்கிறது.
கலப்பு அணிகளுக்கான ரிகர்வ் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, திராஜ் பொம்மதேவரா ஜோடி, 1-5 என ஸ்பெயினின் எலியா, ஆன்ட்ரியாஸ் ஜோடியிடம் தோற்றது.

Advertisement