பிரிமியர் தொடர் நிறுத்திவைப்பு * போர் பதட்டம் காரணமாக...

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் காரணமாக, பிரிமியர் தொடர் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தியாவில் பிரிமியர் தொடரின் 18வது சீசன் நடந்தது. தர்மசாலாவில் நடந்த போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின. அப்போது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் காரணமாக, பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
தற்போது 58 போட்டிகள் முடிந்த நிலையில் தொடரை நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் தேவாஜித் சைகியா வெளியிட்ட செய்தி:
பிரிமியர் தொடரை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். சூழ்நிலைக்கு ஏற்ப, அணி உரிமையாளர்களிடம் ஆலோசித்து போட்டி நடக்கும் இடங்கள், தேதி குறித்த விபரம் வெளியிடப்படும். இப்போதுள்ள இக்கட்டான நிலையில் இந்திய அரசு, ராணுவம், மக்களுடன் இணைந்து செயல்படுவோம். நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்.
சமீபத்திய பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு 'ஆபரேஷன் சிந்துார்' வழியாக சரியான பதிலடியை நமது ராணுவத்தினர் கொடுத்தனர். தேசத்தை பாதுகாத்து வரும் ராணுவத்தினருக்கு, பி.சி.சி.ஐ., தலை வணங்குகிறது.
இந்தியாவை பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பி.சி.சி.ஐ., ஆதரவாக இருக்கும். தவிர தேசத்தின் நலனுக்காக எங்கள் முடிவுகளை எப்போதும் மாற்றி அமைத்துக் கொள்வோம். தேசம் தான் பெரிது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
மீண்டும் எப்போது
பிரிமியர் தொடரில் 12 லீக், 4 'பிளே ஆப்' என மொத்தம் 16 போட்டிகள் மீதமுள்ளன. ஒருவாரத்துக்கு பின் மீண்டும் போட்டிகளை நடத்தும் போது, சர்வதேச போட்டிகள் காரணமாக, வெளிநாட்டு வீரர்களால் பங்கேற்க இயலாமல் போகலாம். வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ள ஆசிய கோப்பை தொடர் ரத்தாகும் பட்சத்தில், அந்த தேதிகளில் மீதமுள்ள போட்டிகள் நடக்கலாம்.

நாடு திரும்ப முடிவு
பிரிமியர் தொடரில் பங்கேற்கும் கம்மின்ஸ், ஸ்டார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள், பட்லர், ஆர்ச்சர், பில் சால்ட் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். ஒருசில வீரர்கள் அடுத்த வாரம் மீண்டும் போட்டி துவங்கினால், மறுபடியும் திரும்பி வர வேண்டும் என்பதால், இந்தியாவில் தொடர்ந்து தங்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்...
பிரிமியர் தொடர் பாதியில் நிறுத்தப்படுவது இரண்டாவது முறை. முன்னதாக 2021ல் 29 போட்டி முடிந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக காலவரையின்றி தொடர் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகள் செப்டம்பர்-அக்டோபரில், எமிரேட்சில் நடத்தப்பட்டன.

Advertisement