மின்ரயில் இன்ஜினில் திடீர் கோளாறு 40 நிமிடங்கள் ரயில்சேவை பாதிப்பு

சென்னை,
கொரட்டூர் ரயில் நிலையம் அருகில், மின்சார ரயில் இன்ஜினில் மின்சாதன கருவி திடீரென பழுதானது. இதனால், 40 நிமிடங்கள் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை புறநகரில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடம் முக்கியமானதாக உள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் இயக்கப்படும், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில், லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த தடத்தின் அதிவேக பாதையில், அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரலை நோக்கி நேற்று காலை 8:00 மணி அளவில் வந்த மின்சார ரயில், கொரட்டூர் அருகில் திடீரென நின்றது. ரயில் ஓட்டுனர் ஆய்வு செய்தார்.

ரயிலுக்கு மின்விநியோகம் செய்யும் 'பாண்டோகிராப்' என்ற கருவியில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, கட்டுப்பாட்டு அறைக்கு, ரயில் ஓட்டுனர் தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே தொழில்நுட்ப அலுவலர்கள், தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தனர்.

இதற்கிடையே, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், பயணியர் 40 நிமிடங்கள் வரை அவதிப்பட்டனர். பயணியர் சிலர் ரயிலில் இருந்து இறங்கி, தண்டவாளங்களில் நடந்து சென்று பேருந்து நிலையங்களுக்கு சென்றனர்.

மின்சாதன கருவியை செய்த பின், காலை 8:45 மணிக்கு பிறகு, ரயில் சேவைகள் மீண்டும் துவங்கின.

Advertisement