பிளஸ் 2 தேர்ச்சியில் 4ம் இடம்; ஆனாலும் கோவையே 'டாப்' கூட்டிக் கழிச்சுப் பாருங்க; கணக்கு சரியாக வரும்!

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், கோவை மாவட்டம் நான்காமிடம் பெற்றிருக்கிறது என்றாலும், பள்ளிகள் எண்ணிக்கை, நுாறு சதவீத தேர்ச்சி மற்றும் மாணவ - மாணவியர் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சியை கணக்கிட்டால், கோவையே முதலிடத்தில் இருக்கிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அடிப்படையில், முதல் ஐந்து இடங்களை பள்ளி கல்வித்துறை பட்டியலிட்டுள்ளது.

ரேங்க் பட்டியல்



அரியலுார் முதலிடம், ஈரோடு இரண்டாமிடம், திருப்பூர் மூன்றாமிடம், கோவை நான்காமிடம், கன்னியாகுமரி ஐந்தாமிடம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், தேர்ச்சி விகிதம் கணக்கிடப்பட்டு, 'ரேங்க்' வெளியிடப்பட்டுள்ளது. முதலிடம் பெற்றுள்ள அரியலுார் மாவட்டத்தில், 92 பள்ளிகளே உள்ளன. 8,533 மாணவர்கள் தேர்வெழுதியதில், 8,432 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். நான்காமிடம் வந்துள்ள கோவையில், 363 பள்ளிகள் இருக்கின்றன.

35 ஆயிரத்து, 37 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 34,155 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். 180 பள்ளிகள், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றிருக்கின்றன. முதல் ஐந்து இடங்கள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், கோவையில் மட்டுமே அதிகமான பள்ளிகள், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வெழுதியிருக்கின்றனர். அதிகமானோர் தேர்ச்சியும் பெற்றிருக்கின்றனர்.

எண்ணிக்கையை பாருங்க



இதில், தேர்ச்சி விகிதம் அடிப்படையில் கணக்கிடும்போது, திருப்பூர் மாவட்டம் 97.53 சதவீதம் தேர்ச்சி பெற்று, மூன்றாமிடத்தில் இருக்கிறது. 0.05 சதவீதம் பின்தங்கி, 97.48 சதவீதம் பெற்றதால், கோவை நான்காமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் தேர்வெழுதியவர்கள் 25 ஆயிரத்து, 597 மாணவர்கள்; கோவையில், 35 ஆயிரத்து, 37 மாணவர்கள் தேர்வெழுதினர். 9,440 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதினர். அதிலும், 34 ஆயிரத்து, 155 பேர் தேர்ச்சி பெற்று, பெருமை சேர்த்திருக்கின்றனர். 882 மாணவர்களே, தேர்ச்சியை நழுவ விட்டிருக்கின்றனர். அரசு பள்ளிகள் வரிசையிலும் அரியலுார் மாவட்டமே முதலிடத்தை பெற்றிருக்கிறது. அம்மாவட்டத்தில், 56 அரசு பள்ளிகளே உள்ளன; 4,885 மாணவர்களே தேர்வெழுதி இருக்கின்றனர். கோவையில் 114 பள்ளிகள் இருக்கின்றன; அம்மாவட்டத்துடன் ஒப்பிடும்போது, இரு மடங்கு அதிகம்.

அதேபோல், 10 ஆயிரத்து, 896 மாணவர்கள் தேர்வெழுதி, 10 ஆயிரத்து, 301 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆனால், ரேங்க் பட்டியலில் ஏழாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளது. அதனால், பள்ளிகள் எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 'ரேங்க்' பட்டியல் தயாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை, ஆசிரியர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.



மாற்றியமைக்குமா கல்வித்துறை?

மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:தேர்ச்சி விகிதம் அடிப்படையில் 'ரேங்க்' வெளியிடுவதால், இதுபோன்ற சிக்கல் ஏற்படுகிறது. மாநில அளவில் பள்ளிகளை 'கிளஸ்டர்'களாக வகைப்படுத்த வேண்டும். பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையிலோ அல்லது மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையிலோ 'கிளஸ்டர்' உருவாக்க வேண்டும். மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளை தனியாக வகைப்படுத்த வேண்டும். பின்தங்கிய மாவட்டங்களை, தனியாக கணக்கிட வேண்டும். தேர்ச்சியை தனித்தனியாக பிரித்து ஆய்வு செய்து, 'ரேங்க்' அறிவிக்க வேண்டும். ஏனெனில், சில மாவட்டங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு; தேர்ச்சி விகிதம் அதிகம் என்பதால், அம்மாவட்டங்களே சிறந்தவை என்கிற பிம்பம் ஏற்படுகிறது. அதிக மாணவர்கள் தேர்வெழுதி, அதிக தேர்ச்சி பெற்றிருந்தாலும் பின்னுக்கு தள்ளப்படுவதால், ஆசிரியர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காத சூழல் ஏற்படுகிறது. எனவே, தேர்ச்சி விகித நடைமுறையை, பள்ளி கல்வித்துறை மாற்றியமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement