சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மடிப்பிச்சை ஏந்தி நுாதன போராட்டம்



சேலம்:
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், சேலம் மாவட்ட மையம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நுாதன போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வடிவேலு தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த, 2021 தேர்தலில் அடிப்படை ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த வாக்குறுதியை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. 7வது ஊதியக்குழுவிடம், எங்கள் கோரிக்கையை பரிந்துரைக்காத அப்போதைய அ.தி.மு.க., அரசு, 500 ரூபாயை உயர்த்தி, ஓய்வூதியமாக, 2,000 ரூபாய் வழங்கி ஏமாற்றிவிட்டது. அதை கண்டித்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 3,850 ரூபாய் ஓய்வூதியத்தை, 2017 அக்டோபர் முதல், நிலுவையுடன் வழங்க தீர்ப்பளித்தது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லை எனில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மடிப்பிச்சை ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். நிர்வாகிகள் ராமலிங்கம், சந்திரா, உண்ணாமலை, வையாபுரி, கதிர்வேல், பொன்னு வேல், கந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement