'ஜாவா' பைக்கை ஓட்டி பார்ப்பதாக 'அல்வா' கொடுத்து நழுவிய திருடன்

சின்னமனுார்:கேரள மாநிலம், கோட்டயம் அருகில் உள்ள பிச்சக்க பள்ளையில் வசிக்கும் பிரதீப் மகன் அஸ்வின், 21; தன் புதிய ஜாவா பைக்கில் உத்தமபாளையத்திலிருந்து சின்னமனுார் நோக்கி, கடந்த 5ம் தேதி சென்றுள்ளார்.

அப்போது பாதி வழியில் அவரை வழிமறித்த, ஒரு நபர், அஸ்வினிடம், லிப்ட் கேட்டு தன்னை சின்னமனுாரில் இறக்கி விடுமாறு கோரினார். அஸ்வினும், அவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு சின்னமனுார் வந்தார்.

ரோட்டோரம் ஒரு டீக்கடையில் அவரை இறக்கி விட்டுள்ளார். அஸ்வினுக்கும் டீ சாப்பிடும் எண்ணம் வர, பைக்கை டீக்கடையில் நிறுத்தினார்.

அஸ்வினிடம், 'இந்த ஜாவா பைக் எவ்வளவு விலை; நானும் வாங்க போகிறேன்' என, நைசாக அந்த நபர் பேச்சு கொடுத்தார்.

அஸ்வின் ஜாவா பைக் விலை மற்றும் சிறப்பம்சங்களை விளக்க, 'அப்படியா, அப்படியா' என, ஆர்வம் பொங்க கேட்ட அவர், ஒரு கட்டத்தில், 'இந்த பைக்கை நான் ஓட்டிப் பார்க்கலாமா?' என, அஸ்வினிடம் கேட்டார்.

இவ்வளவு துாரம் பழகிய நபர் கேட்டதால், அஸ்வினும் நம்பி அவரிடம் சாவியை கொடுத்து, 'ஓட்டி பார்' என்றார். ஆனால், ஓட்டிப்பார்க்க சென்ற நபர், பைக்குடன் ஓட்டம் பிடித்துவிட்டார் என்பது, சில நிமிடங்கள் கழித்து தான் அஸ்வினுக்கு தெரியவந்தது.

காத்திருந்து, காத்திருந்து கடுப்பான அஸ்வின், கடைக்காரரிடம் விசாரித்து, அதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பல இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்காததால், சின்னமனுார் போலீசில் அஸ்வின் புகார் செய்தார்.

பைக்கில் அந்த நபரை ஏற்றி வந்த போது, தன் மொபைல் போனில் சிக்னல் கிடைக்காததால், 'லிப்ட்' கேட்டு வந்தவரின் போனை வாங்கி, தன் வீட்டிற்கு அஸ்வின் பேசியுள்ளார்.

இதை வைத்து, அந்த ஏமாற்று பேர்வழியின் மொபைல் போன் எண்ணை கண்டறிந்து விசாரித்ததில், அவர், கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்த வகாப் மகன் நகாப், 23, என தெரியவந்தது. போலீசார் நகாப்பை தேடி வருகின்றனர்.

Advertisement