நகராட்சி குடிநீர் அபிவிருத்தி பணிகளுக்காக... ரூ.24.5 கோடி ஒதுக்கீடு! 30 ஆண்டுக்கு பின் நீரேற்று நிலையம் புதுப்பிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், 30 ஆண்டுகளுக்குப்பிறகு, தலைமை நீரேற்று நிலையம் புதுப்பித்தல் உள்ளிட்ட குடிநீர் அபிவிருத்தி பணிகள், 24.5 கோடி ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி, 1920ம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. கடந்த, 1939ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 36 வார்டுகளில், 13.87 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டதாக உள்ளது.
கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 90,180 ஆகும். தற்போது, 96,702 பேர் மக்கள் தொகை உள்ளது.
கடந்த, 1948ம் ஆண்டு நகரில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில் உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள, ஆழியாறு ஆற்றை ஆதாரமாகக்கொண்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. மொத்தம், 5.5 ஏக்கர் பரப்பளவில், தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.ஆற்றில் இருந்து, 80 எச்.பி., வி.டி., மற்றும், 60 எச்.பி., வி.டி., பம்பு செட்டுகளை கொண்டு நீர் உறிஞ்சப்படுகிறது.
1975, மற்றும் 1994ம் ஆண்டு கட்டப்பட்ட, 22.67 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி வாயிலாக நீர் வடிக்கப்படுகிறது.
தினமும், அம்பராம்பாளையம் ஆறு அருகே உள்ள, நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, ஒரு நாளுக்கு, 14 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது.மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, 11 மில்லியன் லிட்டர் தினசரி வினியோகிக்கப்படுகிறது. ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு சராசரியாக, 107 லிட்டர் வினியோகிக்கப்படுகிறது. நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொது இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி, மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல் தண்ணீரும் வழங்கப்படுகிறது.
செயல்திறன் குறைந்தது
அம்பராம்பாளையம் ஆற்றில் நீரேற்று நிலையம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. கட்டடத்தின் வலிமை இழந்து அதன் செயல்திறன் குறைந்துள்ளது. மேலும், கட்டடத்தின் அதே இடங்களில் பழுதுகள் ஏற்படுவதால், தொடர்ந்து இயக்க இயலாத நிலை உள்ளது.
நீரேற்று நிலையம் புதுப்பிக்கவும், தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, அரசுக்கு நகராட்சி நிர்வாகம் வாயிலாக கருத்துரு அனுப்பப்பட்டது. அதன்படி, அரசு, 24.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
முழு அளவில் பணி
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், 24.50 கோடி ரூபாய்க்கு குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதில், அம்பராம்பாளையத்தில் தற்போது, 14 மில்லியன் கனஅடி நீர் சுத்திகரிப்பு செய்வதற்கு மாற்றாக புதியதாக, 26 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில், பழைய ஆறு போல் கம்பங்களுக்கு பதிலாக, 22 கே.வி., மின் பெட்டகம் அமைக்கப்பட உள்ளது.
பழைய, 75 எச்.பி., மின் மோட்டாருக்கு பதிலாக, 100 எச்.பி., மின்மோட்டார் அமைக்கப்படும். அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில், பழுதடைந்த மின் மோட்டார் கட்டடத்துக்கு பதிலாக, புதிய பம்ப் அறை கட்டப்படும். பழுதடைந்த நிலையில் உள்ள, குடிநீர் தரைமட்ட தொட்டிக்கு பதிலாக, புதிய தரைமட்ட தொட்டி கட்டப்படும்.
தலைமை நீரேற்று நிலையத்தை சுற்றிலும், பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. மார்க்கெட் ரோடு புதிய நீருந்து நிலையத்தில் உள்ள ஆறு போல் கம்பங்களுக்கு பதிலாக, 22 கே.வி., மின பெட்டகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
பழைய சிமென்ட் குடிநீர் குழாய்களுக்கு பதிலாக, புதிய டி ஐ குழாய் மார்க்கெட் ரோடு முதல் மகாலிங்கபுரம் வரை, ஒன்றரை கி.மீ.,க்கு பதிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அதே போன்று மார்க்கெட் ரோடு முதல் ஜோதிநகர் வரை, இரண்டரை கி.மீ.,க்கு புதிய குழாய்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
நகரில் தடையின்றி தண்ணீர் வழங்குவதற்காக, 30 ஆண்டுகளுக்கு பிறகு முழு அளவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும்
-
வெளியுறவு செயலரை விமர்சிப்பதா: தலைவர்கள் கண்டனம்
-
ஏ.டி.எம்., சேதம் இல்லாமல் ரூ.10 லட்சம் திருட்டு: குருகிராமில் நுாதன சம்பவம்
-
அறிவியல் தொழில்நுட்ப வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
-
ஜெய்சால்மரில் தொடரும் பதற்றம்; மீண்டும் பிளாக் அவுட்டுக்கு உத்தரவு
-
திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் இருந்த தம்பதி கொலை
-
சத்தீஸ்கரில் யானை தாக்கி பெண்கள் இருவர் மரணம்