வரிச்சியூர் செல்வம் கூட்டாளிக்கு பிடிவாரன்ட்

விருதுநகர்:விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணைக்கு ஆஜராகாத வரிச்சியூர் செல்வம் கூட்டாளிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த, வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில்குமாரைக் காணவில்லை என அவரது மனைவி முருகலட்சுமி 2021ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

போலீசார் விசாரணையில், ஒரு கும்பல் மூலம் செந்தில்குமாரை வரிச்சியூர் செல்வம் கொலை செய்தது தெரிந்தது. 2023ல் போலீசார் அவரை கைது செய்து சாத்துார் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

பின்னர் விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. நேற்று நடந்த விசாரணைக்கு வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். மும்பையைச் சேர்ந்த அவரது கூட்டாளி ஈஸ்வர சாய் தேஜூ ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார். விசாரணை மே 16க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement