பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுங்க!
பொள்ளாச்சி : 'தமிழகத்தில் உள்ள பங்களாதேஷ், பாகிஸ்தானியரை வெளியேற்ற வேண்டும்,' என, பா.ஜ., சார்பில், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம், 22ம் தேதி பயங்கரவாதிகளால், சுற்றுலா பயணியர் சுட்டு கொல்லப்பட்டனர்.இதன் விளைவாக, மத்திய அரசு, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வெளிநாட்டினரை வெளியேற்ற உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இவ்விஷயத்தில் மெத்தனம் காட்டுகிறது.
தமிழகத்தில் உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களை வெளியேற்றுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.மத்திய அரசு, நேற்றுமுன்தினம் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை, 'ஆபரேசன் சிந்துார்' வாயிலாக அழித்துள்ளது.
மேலும், 'ஆபரேசன் சிந்துார்' குறித்து சமூக வலைதளங்களில் சிலர், இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்று பதிவிடுபவர்களை இந்திய இறையாண்மை சட்டத்தின்படியும், தேசதுரோக சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுத்து, தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.