குப்பை கழிவால் தொற்று நோய் அபாயம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்னாச்சு?

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மை பணிகளில், குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது முதன்மையாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சியிலும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில், துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஊராட்சிகளில் உரம் தயாரிப்பது மற்றும் குப்பை கழிவை தரம் பிரிப்பதற்கான குடில் அமைக்கப்பட்டது. துாய்மை பணியாளர்கள், குப்பை கழிவை சேகரித்து மட்கும் மற்றும் மட்காத வகைகளை பிரிக்க வேண்டும்.

இதில், மட்கும் கழிவுகளை உரமாக்குவதற்கு உரக்குழிகள் அமைத்து, அதில் சேகரிப்பதும் திட்டத்தின் செயல்பாடாக உள்ளது. இந்நிலையில், திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், மணவூர் உட்பட பெரும்பாலான ஊராட்சிகளில், கழிவை தரம்பிரிக்கும் பணிகள் முறையாக நடக்கவில்லை.

பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல், மட்கும் மற்றும் மட்காத கழிவை ஒன்றாகவே கொட்டுவதால், பணியாளர்களும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் குப்பை கழிவை, நீராதாரங்களுக்கு அருகே தீ வைத்து எரிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இப்பிரச்னை குறித்து, மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கிராமங்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.

கிராமங்களில் குப்பை கழிவை மறுசுழற்சி செய்வது குறித்து, சில ஆண்டுகளுக்கு முன், மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக உரக்குடில்களில் ஆய்வு நடத்தப்பட்டது. கழிவுகளை தரம் பிரிப்பதற்கு இயந்திரம் பொருத்துவதற்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த பணிகளும் நடக்கவில்லை.

இதனால், குப்பை கழிவு ஊராட்சிகளில் தேங்கி சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், குப்பை கழிவால் கிராமங்கள் பாழாகி வரும் நிலையில், மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement