பறிமுதல் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், தச்சூர் பகுதியில் கவரைப்பேட்டை காவல் நிலையம் இயங்கி வருகிறது. கவரைப்பேட்டை போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், காவல் நிலையம் எதிரே, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
ஆந்திராவில் இருந்து பொன்னேரி வழியாக மணலி, எண்ணுார் துறைமுகம் செல்லும் கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், இந்த இணைப்பு சாலை வழியாக சென்று வருகின்றன.
பறிமுதல் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ள இடம்போக, மீதமுள்ள குறுகிய சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இதனால், இந்த இணைப்பு சாலையில் போக்குவரத்து நெருக்கடி மட்டுமின்றி, விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.
எனவே, பறிமுதல் செய்த வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தாமல், காவல் நிலையத்தை சுற்றியுள்ள காலி இடங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.