மக்களிடம் வரவேற்பில்லாத உழவர் சந்தை விவசாயிகள் வராததால் கடைகள் 'வெறிச்'

திருவள்ளூர்:திருவள்ளூரில் மறுசீரமைக்கப்பட்ட உழவர் சந்தையில் மக்கள் வரவேற்பில்லாமல், விற்பனை மற்றும் விவசாயிகள் வராததால், கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருவள்ளூர் ஜே.என்., சாலையில், கடந்த 2000ல், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, உழவர் சந்தையை திறந்து வைத்தார். இங்கு, 40 கடைகள் அமைத்து, விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்கு பின், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உழவர் சந்தை செயல்படாமல் முடங்கியது. இந்த நிலையில், தி.மு.க., ஆட்சி மீண்டும் பொறுப்பேற்றதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருவள்ளூர் உழவர் சந்தை, 44.31 லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைக்கப்பட்டு கழிப்பறை, குடிநீர் வசதியுடன், 22 கடைகள் புனரமைத்து, ஆறு புதிய கடைகள் கட்டப்பட்டன.

மறுசீரமைக்கப்பட்ட உழவர் சந்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. அப்போது பேசிய கைத்தறி துறை அமைச்சர் காந்தி, 'இங்கு உழவர் உற்பத்தியாளர் குழு, விவசாயிகள் உற்பத்தி செய்த காய், கனி, பல்பொருள் கூட்டுறவு சிறப்பு அங்காடி, பூக்கடை செயல்படும்.

'மாலை சிற்றுண்டி, சூப் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும்' என தெரிவித்தார். தற்போது, இந்த உழவர் சந்தையில் உள்ள கடைகள் அனைத்தும் விற்பனையில்லாததால், விவசாயிகள் யாரும் கடை அமைக்க முன்வரவில்லை.

தற்போது, இந்த உழவர் சந்தையில் உள்ள 20 கடைகள் காலியாக உள்ளன. நுழைவாயிலில் உள்ள மூன்று கடைகளில் மட்டும், சிலர் காய்கறி, கீரை வகைகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், மீதமுள்ள காலி இடத்தில், உழவர் சந்தையை சுற்றிலும் ஆக்கிரமித்துள்ள பூக்கடைக்காரர்கள், தங்களின் பொருட்களை வைக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, உழவர் சந்தை தற்போது வெறிச்சோடி காட்சியளிக்கிறது. எனவே, மாவட்ட வேளாண் விற்பனை துறையினர், உழவர் சந்தையில் விவசாயிகளை கடை அமைக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement