நில நடுக்கத்தில் உதவிய இந்தியா; நன்றி மறந்த துருக்கி

அங்காரா: ஆபத்து காலத்தில் இந்தியா தனக்கு செய்த உதவிகளை மறந்து, இந்தியாவுக்கு எதிராக போராடும் பாக்.,கிற்கு ட்ரோன்களை கொடுத்துள்ளது துருக்கி.
மேற்காசிய நாடான துருக்கியின் அங்காரா உள்ளிட்ட இடங்கள் 2023ல் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, 'ஆப்பரேஷன் தோஸ்த்' என்ற மீட்பு நடவடிக்கையை துவங்கி, முதல் நாடாக இந்தியா களம் இறங்கியது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க, 'கருடா' ட்ரோன்களையும், மீட்பு பணிகளுக்கு 'சி 17' ரக போர் விமானங்களையும் அனுப்பியது. நம் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை துருக்கி வழங்கியது நேற்று தெரிந்தது. நம் நாட்டின் லே துவங்கி சர் கிரிக் வரை மேற்கு எல்லையோரத்தில் 36 இடங்களை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு, 400 ட்ரோன்களை பாக்., ஏவியது. அவற்றை நம் படையினர் தடுத்து நிறுத்தி அழித்தனர்.
அந்த சிதைவுகளை கைப்பற்றி நேற்று ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் துருக்கியின், 'அசிஸ்கார்டு சோங்கர்' என்ற ட்ரோன்கள் என தெரிந்தது. துருக்கி படைகளால் பயன்படுத்தப்படும், முதல் ஆயுதம் தாங்கிய ட்ரோன், இதுவாகும்.
ஏற்கனவே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த மறு வாரம் துருக்கியின் போர் விமானங்களில் கராச்சி உள்ளிட்ட பாக்., நகரங்களுக்கு ஆயுதங்கள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது.
இது, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, துருக்கியை துாதரக ரீதியாக உலக அளவில் தனிமைப்படுத்த இந்தியா முடிவு செய்துஉள்ளது.







