3 நாட்களுக்கு ஏ.டி.எம்., மூடப்படுகிறதா? புரளி வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி: வங்கி ஏ.டி.எம்.,கள், இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக, வாட்ஸாப் உள்ளிட்டவற்றில் பரவும் தகவல்கள் பொய் என, மத்திய அரசு எச்சரித்துஉள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அது தொடர்பாக வாட்ஸாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் ஏராளமான தகவல்கள் பரவுகின்றன.

அதில் ஒன்றாக, இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுதும் வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் மூடப்படும் என்ற வதந்தி வேகமாக பரவியது. இந்நிலையில், இது பொய்யான தகவல் எனவும், உறுதிப்படுத்தப்படாத, சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்பக் கூடாது எனவும் மத்திய அரசு எச்சரித்துஉள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், 'ஏ.டி.எம்., மையங்கள் மூடப்படும் என வாட்ஸாப்பில் பரவும் தகவல் போலியானது. ஏ.டி.எம்., மையங்கள் வழக்கம்போல செயல்படும்.

இதுபோன்ற சரி பார்க்கப்படாத செய்திகளை பகிர்வதால், பீதியான சூழல் பரவுவதோடு, வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் குவிய நேரிடும்.

இது வங்கி பணிகளை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற தகவல்களை பகிரும் முன், உண்மை தன்மையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது.

Advertisement