எல்லையில் ஊடுருவல் முயற்சி 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் சம்பா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்புடன், நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஏழு பயங்கரவாதிகளை, நேற்று எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை, கடந்த 7ம் தேதி நம் ராணுவம் தாக்கி அழித்தது.
இதனால், பாகிஸ்தான் ராணுவம் நம் விமானப் படை தளங்கள் மற்றும் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மாநிலங்களின் பல்வேறு நகரங்களை குறிவைத்து நேற்று முன்தினம் தாக்க முயற்சித்தது.
பாகிஸ்தானின் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை, இந்திய விமானப் படை வானிலேயே தடுத்து அழித்தது. இதற்கிடையே ஜம்மு - காஷ்மீரின் எல்லை பகுதிகளில் தரைவழியாக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனால், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் இருந்தனர்.
பாகிஸ்தானின் தாந்தர் நிலையில் இருந்து அந்நாட்டு ராணுவத்தினர் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதை பயன்படுத்தி, ஏழு பயங்கரவாதிகள் நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.
அவர்களை கண்காணித்த பி.எஸ்.எப்., வீரர்கள், பயங்கரவாதிகள் ஏழு பேரையும் சுட்டுக்கொன்று ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.
பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து உதவுவதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளதாக பி.எஸ்.எப்., வீரர்கள் தெரிவித்தனர்.