ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள எச்சரிக்கை!: பொய்கள் பரவுவதை தடுக்க மத்திய அரசு அதிரடி

'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் நடமாட்டம் ஆகியவற்றை, சம்பந்தப்பட்ட இடங்களுக்கே நேரில் சென்று செய்தி சேகரிப்பதையோ அல்லது நேரடி ஒளிபரப்பு செய்வதையோ தவிர்க்க வேண்டும்' என்று, மத்திய அரசு இரண்டாவது முறையாக கேட்டுக் கொண்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த பின், கடந்த மாதம் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதில், 'பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு படையினரின் நடமாட்டங்கள் ஆகியவற்றை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருக்கும்படி அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் அறிவுறுத்தப்படுகின்றன.

'பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில், அரசால் நியமிக்கப்படும் சிறப்பு அதிகாரி தரக்கூடிய செய்தி கள், விளக்கங்கள் ஆகியவற்றை மட்டுமே வெளியிட வேண்டும்' என, ஊடகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

பாதுகாப்பு



தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கையாக, பாகிஸ்தான் மீது நம் ராணுவம் உக்கிரமான தாக்குதலை துவங்கியுள்ள நிலையில், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் என பலவற்றிலும், இது குறித்த நிறைய செய்திகள் கட்டுப்பாடற்ற வகையில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ராணுவ நடவடிக்கைகளில் உள்ள முக்கியத்துவம் உணராமல் கள நிலவரத்துக்கு மாறாக, உண்மைக்கு புறம்பாக, அதீத உணர்ச்சிகளை துாண்டும் வகையிலும், பல்வேறு சமூக சிக்கல்களை உருவாக்கும் வகையிலும், பாதுகாப்பு படையினரின் வியூகங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்த செய்திகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இவை அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று டில்லியில் இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:

நாட்டின் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தும் வகையில் பாதுகாப்பு படையினர் செயலாற்றி வருகின்றனர்.

இது குறித்த நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் நடமாட்டம் ஆகியவற்றை அந்தந்த இடங்களுக்கே சென்று நேரில் பார்த்து செய்தி வெளியிடுவது அல்லது அவற்றை நேரலை செய்வதுமாக சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இது போன்ற செயல்களை ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள் என அனைத்து தரப்புமே முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

மிகவும் உணர்வுபூர்வமான அல்லது ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை வெளியிடுவதன் வாயிலாக, பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். சில சமயங்களில் உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டு விடலாம்.

கூடுதல் கண்காணிப்பு



இதற்கு முன் நடந்த கார்கில் யுத்தத்தின் போதும், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போதும், காந்தகாரில் விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தின் போதும் இது போன்ற பொறுப்பற்ற வகையில் செய்திகள் வெளியாகின.

பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் பிறகு எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்த அபாயம் தெரியாமல், பொறுப்பற்ற வகையில், முதிர்ச்சியற்ற வகையில் செய்திகள் சேகரிக்கப்பட்டு, அவை வெளியாகின. அதுபோல தற்போது நடந்து விடக்கூடாது.

கடந்த 2021ம் ஆண்டு, 'கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்' சட்ட திருத்தத்தின், ஆறாவது பிரிவின் ஒன்றாவது அம்சத்தில் முக்கிய ஷரத்து உள்ளது.

இதன்படி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, அவை குறித்து சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அவ்வப்போது தரக்கூடிய செய்திகள் மற்றும் பேட்டிகளை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்.

இந்த விதியை ஊடகங்கள் தற்போது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது கூடுதல் கண்காணிப்பும், பொறுப்பும் கொண்ட வகையில் செயல்பட்டு, நம் நாட்டிற்கான சேவையில் உயர்ந்த மாண்புகளை நிலைநிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் ஆலோசனை

தற்போது எழுந்துள்ள போர் மேக சூழ்நிலை குறித்த ஆய்வு கூட்டம், டில்லி சவுத் பிளாக்கில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் நேற்று நடந்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். முப்படைகளின் தளபதி அனில் சவுகான், ராணுவ ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, விமானப்படை ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ராணுவ அமைச்சக செயலர் ஆர்.கே.சிங்கும் கலந்து கொண்டார். 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட பதிலடி தாக்குதல் நடவடிக்கைகள் குறித்தும், அதன் பிறகு எழுந்துள்ள புதிய சூழ்நிலைகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் ஆலோசனை நடந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், மருத்துவமனைகளில் சுகாதார வசதிகள் எந்தளவு உள்ளன? மருந்துகள் கையிருப்பு, அவசரகால நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்கக்கூடிய அளவுக்கு சுகாதார அமைச்சகத்தின் கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.




புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் பாகிஸ்தான்

போர் தொடர்பான போலி வீடியோக்களை இணையதளம் வாயிலாக பாக்., தரப்பினர் பரப்பி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாய கழிவுகள் எரிக்கப்பட்டது தொடர்பான பழைய வீடியோவை, பஞ்சாபின் ஜலந்தரில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக பாக்., ஆதரவாளர்கள் வெளியிட்டனர். இந்தியாவின் '20 ராஜ் பட்டாலியன்' முகாம் தகர்க்கப்பட்டதாகவும் ஒரு வீடியோ பரவியது. ஆனால், அப்படி ஒரு பெயரில் எந்த ஒரு பட்டாலியனும் இந்திய ராணுவத்திலோ, துணை ராணுவத்திலோ கிடையாது. கடந்த 2020ல் மேற்கு ஆசிய நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் வீடியோ காட்சிகளை வெளியிட்டு, நம் நாட்டின் ரஜோரியில் உள்ள ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக பாக்., பொய் பரப்பி வருகிறது. இது போன்ற எட்டு போலி வீடியோக்களை நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரையிலும் உண்மைத் தன்மை சோதனை வாயிலாக, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் கண்டறிந்துஉள்ளது.



- நமது டில்லி நிருபர் -

Advertisement