நள்ளிரவில் தாக்குதல்: எல்லையில் பதற்றம்

ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் 26 இடங்களில் நேற்று நள்ளிரவில் எல்லை பகுதியிலிருந்து அத்துமீறி தொடர்ச்சியாக பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன்களை, நம் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து தாக்கி அழித்தனர். இதேபோல் ஜம்மு - காஷ்மீரின் உரி, பூஞ்ச், குப்வாரா உள்ளிட்ட பகுதிகளில் பீரங்கிகள் வாயிலாக பாக்., ராணுவத்தினர் அத்துமீறி தாக்கினர்.

இதற்கிடையே, ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தானின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பாகிஸ்தான் ஏவிய ட்ரோன், பஞ்சாபின் பெரோஸ்பூரில் குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் சிலர் படுகாயம் அடைந்தனர். ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவை அனைத்தையும் நம் ராணுவம் முறியடித்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement