'இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடுவது எங்கள் வேலையில்லை': அமெரிக்க துணை அதிபர்

நியூயார்க்: ''இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் விவகாரத்தில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது. அடிப்படையில் அது, எங்களுக்கு தேவையற்ற வேலை,'' என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறினார்.
அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மாறாக, போர் பதற்றத்தை குறைத்துக்கொள்ள வலியுறுத்தலாம். எனினும், அடிப்படையில் அது, அமெரிக்காவுக்கு தேவையற்ற வேலை.
இரண்டு அணு ஆயுத நாடுகள் சண்டையிட்டு கொள்கின்றன. அந்த நாடுகளை, 'மேற்கொண்டு சண்டையிட வேண்டாம்; மிகப்பெரிய பிரச்னையாக ஆகிவிடும்' என்று மட்டும் தான் அமெரிக்காவால் கேட்க முடியும்.
அடிப்படையிலேயே, பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு பல பிரச்னைகள் உள்ளன. இந்த நேரத்தில், அந்த இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு, 'போரை நிறுத்துங்கள்' என உத்தரவிட முடியாது.
அடிப்படையில் பார்த்தால், அது, அமெரிக்காவிற்கு தேவையற்ற விவகாரம்; அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் அந்த விவகாரம் இல்லை.
இந்தியர்களை, ஆயுதங்களை கீழே போடுங்கள் என அமெரிக்காவால் சொல்ல முடியாது. அதுபோலவே, பாகிஸ்தானியர்களையும் கூற முடியாது. இருதரப்பு பிரச்னைகளையும் தீர்க்க, துாதரக ரீதியான முயற்சி அவசியம் என, பல முறை வலியுறுத்தி வருகிறோம்.
இறைவன் அருளால் இந்த விவகாரம், இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போரை ஏற்படுத்தக் கூடாது; இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போர் ஏற்படாது என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன், வான்ஸ், தன் இந்திய வம்சாவளி மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளுடன் இந்தியா வந்து, பல இடங்களுக்கும் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரை போனில் நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, போர் பதற்றத்தை மேலும் நீட்டிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.