ஒன்றியங்கள் பிரிப்பு விவகாரம்: தி.மு.க., நிர்வாகிகள் எதிர்ப்பு

சென்னை : தி.மு.க.,வில் ஒன்றியங்கள், பேரூராட்சிகளை பிரிக்கும் முடிவால், நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைக்க, தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. கட்சியில் மாறுதல்கள் செய்யவும், அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், தலைமைக்கு பரிந்துரை செய்ய, அமைச்சர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை, கடந்த ஜூலையில் முதல்வர் ஸ்டாலின் அமைத்தார்.
இக்குழு, மாவட்டச் செயலர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. அதைத்தொடர்ந்து மாவட்டங்கள், ஒன்றியங்கள், பகுதிகள், பேரூராட்சிகளை பிரிக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்தது. அதன்படி, இரண்டு அல்லது மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என பிரிக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக, 864 ஒன்றியங்கள் உள்ளன. இவற்றை 1,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர், வேலுார், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலுார், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில், ஒன்றியங்கள் இரண்டு அல்லது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் பிரிக்கப்பட உள்ளன.
வரும் ஜூன் 1ல் மதுரையில் நடக்கும் பொதுக்குழுவுக்கு முன், இந்த மாற்றங்களை செய்து, புதிய நிர்வாகிகளை நியமிக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. ஒன்றியங்கள் பிரிக்கப்படுவது, ஏற்கனவே ஒன்றியச் செயலர்களாக உள்ளோரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கடந்த நான்காண்டுகளாக தி.மு.க., ஆட்சி நடந்தாலும், அதன் பலன்கள் ஒன்றிய, பேரூராட்சி செயலர்களுக்கு கிடைக்கவில்லை. அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களை சார்ந்துதான் இருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், இருக்கும் ஒன்றியங்கள், பேரூராட்சிகளை பிரித்தால், ஒன்றிய, பேரூராட்சி செயலர்களுக்கு, எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் போய்விடும்.
உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு, ஒன்றியச் செயலர் பெயர் முதலில் பரீசிலிக்கப்படும். ஒன்றியங்களை பிரிப்பதால், அதற்கு கடும் போட்டி ஏற்பட்டு, கிடைக்கும் வாய்ப்பும் பறிபோய்விடும்.
எனவே, கட்சியில் எந்த மாற்றங்களை செய்வதாக இருந்தாலும், மாவட்டச் செயலர்கள் வரை மட்டும் கேட்டு முடிவெடுக்காமல், ஒன்றிய, பேரூராட்சி செயலர்களின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.