முடிவுக்கு வந்தது போர்; காஷ்மீரில் இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்!

2

ஸ்ரீநகர்: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை, காஷ்மீரில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது.
இன்று 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டு உள்ளன.

வரும் 12ம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை, காஷ்மீரில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

மகிழ்ச்சியான தருணம்



காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து உள்ளூர்வாசிகள் கூறியதாவது: இன்று போர் நிறுத்தம் பற்றி கேள்விப்பட்டோம், அதை நாங்கள் வரவேற்கிறோம். இது இரு நாடுகளும் எடுத்த ஒரு நல்ல முடிவு, இன்று அமைதி மற்றும் மகிழ்ச்சியின் தருணம்.
போர் நிறுத்தத்தை நாங்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்கிறோம்.

பதற்றத்தைக் குறைப்பது ஒரு நல்ல நடவடிக்கை. ஆனால் ஜம்மு காஷ்மீரிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் பரப்பும் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பாகிஸ்தானை எச்சரிக்கிறோம், என்றனர்.

தெளிவாக தெரியும் வெற்றி!



ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மாரை சேர்ந்த உள்ளூர்வாசிகள் கூறியதாவது:
இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீய செயல்களை அழித்ததால் வெற்றி தெளிவாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் நுழையும் முன்பே, அவர்கள் முயன்ற ட்ரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் செயலிழக்கச் செய்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழித்து, அவர்களின் விமான தளங்களை கூட குண்டுவீசித் தாக்கினர்.

இதன் விளைவாக, பாகிஸ்தான் இப்போது அதிர்ச்சியிலும் பயத்திலும் உள்ளது. இதனால் போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திரும்பியது இயல்பு நிலை!




இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, டில்லியில் இயல்பு நிலை திரும்பியது. முக்கிய இடங்களுக்கு வழக்கம்போல் மக்கள் திரண்டனர்.

இந்தியா கேட் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

Advertisement