காங்கிரஸ் மைதானம் யாருக்கு சொந்தம்? அறக்கட்டளைக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
சென்னை:சென்னை அண்ணா சாலையில், காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பாக, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், காங்கிரஸ் அறக்கட்டளை மற்றும் அதன் நிர்வாகிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில், காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக 180 கிரவுண்ட் நிலம் உள்ளது. காமராஜர் அரங்கத்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நிலத்தில், வணிக வளாகம் கட்டுவதற்காக, 'ப்ளூ பேர்ல்' என்ற தனியார் நிறுவனத்துடன், காங்கிரஸ் அறக்கட்டளை, 1996ல் ஒப்பந்தம் செய்தது.
பின், தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த நிலத்தில், திறந்தவெளி நிலத்தை பராமரிப்பது தொடர்பாக, காங்கிரஸ் அறக்கட்டளை ஆட்சேபமில்லா சான்று வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இதுவரை கட்டுமான பணி துவக்கப்படவில்லை.
இந்நிலையில், ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாகக் கூறி, தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை, காங்கிரஸ் அறக்கட்டளை கையகப்படுத்தியது. இதை எதிர்த்து, மத்தியஸ்தர் முன், தனியார் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை, நிலத்தில் தங்களது உரிமையில் தலையிட, காங்கிரஸ் அறக்கட்டளைக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ப்ளூ பேர்ல் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மனுவில், 'இன்னும் ஒப்பந்தம் காலாவதி ஆகவில்லை; ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், நிலத்தை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் அறக்கட்டளை சுவாதீனம் எடுத்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.மாலா, தனியார் நிறுவனத்தின் உரிமையில் தலையிட, காங்கிரஸ் அறக்கட்டளைக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, காங்கிரஸ் அறக்கட்டளை மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்; விசாரணையை, 14ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
மேலும்
-
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு
-
தொடங்கியது சித்திரை முழு நிலவு மாநாடு!
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து