டெஸ்டில் ஓய்வு...கோலி விருப்பம்

புதுடில்லி: டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார் கோலி.
இந்திய கிரிக்கெட்டின் சீனியர் வீரர் கோலி 36. கடந்த 2011ல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான கிங்ஸ்டன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். கடந்த 14 ஆண்டில் மொத்தம் 123 டெஸ்டில் பங்கேற்ற கோலி, 9230 ரன் எடுத்துள்ளார். அதிகபட்சம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான புனே டெஸ்டில் (2019) 254 ரன் எடுத்தார்.
சமீபத்திய டெஸ்டில் இவரது 'பார்ம்' மோசம் ஆனது. ஆஸ்திரேலி தொடரின் முதல் போட்டியில் (பெர்த்) சதம் அடித்த போதும், 9 இன்னிங்சில் 190 ரன் (சராசரி 24.75) தான் எடுத்தார். அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்பட உள்ளது.
இதனிடையே சமீபத்தில் டெஸ்ட் கேப்டன் ரோகித் ஓய்வு அறிவித்தார்.
தற்போது, கோலியும் 'டெஸ்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக,' இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன. இதுகுறித்து கடந்த ஒரு மாதமாக பேச்சு வார்த்தை நடக்கின்றன.
ஏற்கனவே அனுபவ ரகானே, புஜாரா அணியில் இல்லை. 'சீனியர்' சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினும் ஓய்வு பெற்று விட்டார். முகமது ஷமியின் 'பார்மும்' சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
ராகுல், ஜடேஜா, பும்ரா மட்டுமே அணியில் சீனியர்களாக உள்ள நிலையில் கோலியின் வேண்டுகோள், பி.சி.சி.ஐ.,க்கு சிக்கல் தந்துள்ளது. எனினும், இவரது அனுபவம் இங்கிலாந்து தொடருக்கு தேவைப்படும் என, பி.சி.சி.ஐ., நினைக்கிறது. ஒருவேளை தனது முடிவில் கோலி உறுதியாக இருக்கும் பட்சத்தில், இங்கிலாந்து தொடரில் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெறலாம்.

வெற்றிகரமான கேப்டன்
டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தார் கோலி. இவரது தலைமையில் பங்கேற்ற 68 டெஸ்டில், இந்தியா 40 ல் வெற்றி பெற்றது. 17 ல் மட்டும் தோல்வி கிடைத்தது. தோனி (60ல் 27 வெற்றி), கங்குலி (49ல் 21) அடுத்த இடங்களில் உள்ளனர்.

35 போட்டி, 3596 ரன்
கோலி கடந்த 2016-2018ல் டெஸ்டில் ஜொலித்தார். இவரது டெஸ்ட் சராசரி ரன் குவிப்பு 2016ல் 75.93, 2017ல் 75.64, 2018ல் 55.08 ரன்னாக இருந்தது. இந்த 3 ஆண்டில் பங்கேற்ற 35 டெஸ்டில், 14 சதம், 8 அரைசதம் உட்பட 3596 ரன் குவித்தார் (சராசரி 66.59).

காரணம் என்ன
இந்திய டெஸ்ட் அணிக்கு கோலி மீண்டும் கேப்டனாக செயல்பட கோலி விருப்பம் தெரிவித்தார். இதை பி.சி.சி.ஐ., இதை நிராகரித்தது. எதிர்கால நலனுக்கு ஏற்ப, இங்கிலாந்து தொடரில் இளம் வீரர் ஒருவர் கேப்டனாக தேர்வு செய்ய உள்ளது. இதனால் கோலி ஓய்வு பெற முடிவு செய்திருக்கலாம்.

Advertisement