அமெரிக்கா - சீனா பேச்சு துவக்கம் முடிவுக்கு வருமா வர்த்தக போர்?

ஜெனிவா:அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தக போர் பதற்றத்தை தணிக்க, பேச்சு துவங்கியுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் இது தொடர்பான விவாதங்களை துவங்கியுள்ளனர்.
அமெரிக்கா சார்பில் வர்த்தகத்துறை செயலர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கலந்து கொண்டுள்ளனர். சீனா தரப்பில் துணை பிரதமர் ஹி லிபெங் பங்கேற்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், உலக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உலக நாடுகள் ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளன.
பேச்சுகள் துவங்குவதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா மீதான வரியை 80 சதவீதமாக குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, தன் 'ட்ரூத்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சீனா தவிர்த்து, அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்பையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கடந்த மாதம் அறிவித்த டிரம்ப், அந்நாட்டின் மீது 145 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்க பொருட்களின் மீதான வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்தியது.
இந்த வரி விகித உயர்வால், இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், கடந்தாண்டு 56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதில், அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 22.36 லட்சம் கோடி ரூபாய். சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க டிரம்ப் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
இரு நாடுகளுக்கு இடையே நம்பிக்கை பற்றாக்குறை நிலவுவதால், பேச்சுகளின் முடிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு தான் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.