இந்தியா - பாக்., போர் நிறுத்தம்! அமெரிக்கா சமரசம் செய்தது

புதுடில்லி : நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. எதிர்பாராத இந்த திருப்பத்தை அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகுக்கு அறிவித்தார். அமெரிக்காவின் தீவிர முயற்சியால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக கூறிய டிரம்ப், இரு நாடுகளின் பிரதமர்களையும் பாராட்டினார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமுக்கு சுற்றுலா வந்திருந்தவர்களில், 26 ஹிந்து ஆண்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தேர்ந்தெடுத்து சுட்டுக் கொன்றனர். நாட்டை அதிரவைத்த அந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு மக்கள் கொந்தளித்தனர். அதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.
கடந்த 7ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை இந்திய ராணுவம் குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது.
அதில், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக, 7ம் தேதியில் இருந்து மூன்று நாட்களாக இரவு நேர தாக்குதலில் இறங்கியது பாகிஸ்தான்.
நமது வடக்கு, மேற்கு மாநிலங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாக்., ஏவியது. அவற்றை நம் படைகள் நடுவானில் தாக்கி அழித்தன. அதோடு, பாகிஸ்தான் ராணுவ மையங்களை குறிவைத்து எதிர் தாக்குதல் நடத்தின.
அதனால் வெறிகொண்ட பாக்., ராணுவம், ஜம்மு - காஷ்மீரின் நான்கு நகரங்களில் விமான தளங்களையும், பொதுமக்களின் வீடுகளையும் குறிவைத்து குண்டு வீசியது. காஷ்மீர் அரசின் உயர் அதிகாரி, ஒரு குழந்தை உட்பட பலர் மரணம் அடைந்தனர். மருத்துவமனை, பள்ளிகளை கூட எதிரிகள் விட்டுவைக்கவில்லை.
பாகிஸ்தான் எந்த அளவுக்கு தாக்குகிறதோ, அதற்கு சமமான அளவிலேயே பலம் பிரயோகித்து இந்தியா எதிர் தாக்குதல் நடத்துவதாக மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், அப்பாவி மக்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதலை துவக்கி விட்டதால், இதற்கு மேலும் பொறுமை காட்ட அவசியமில்லை என இந்திய ராணுவம் தீர்மானித்தது.
முப்படை தளபதிகளை பிரதமர் மோடி அழைத்து பேசினார். ட்ரோன் யுத்தம் முடிந்து, சண்டை அடுத்த கட்டத்துக்கு நகர்வதாக தோன்றியது. பெரிய அளவில் போர் வெடிக்கப் போகிறது என மேற்கத்திய ஊடகங்கள் உரத்த குரலில் ஆரூடம் கூறின.
அந்த நேரத்தில் தான், சமூக ஊடகத்தில் திடீரென ட்ரம்ப் ஒரு செய்தி வெளியிட்டார். 'இந்தியா - -- பாகிஸ்தான் சண்டை உடனடியாகவும் நிறுத்தப்படுகிறது. இரவு முழுதும் இரு தரப்புடனும் அமெரிக்கா பேசி வந்தது. அதற்கு பலன் கிடைத்துள்ளது. 'புத்திசாலித்தனமாக போர் நிறுத்த முடிவுக்கு சம்மதித்த இருநாட்டு பிரதமர்களையும் பாராட்டுகிறேன்' என, டிரம்ப் தெரிவித்தார்.
சில நிமிடங்களில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ ஒரு அறிவிப்பை வெளியிட்டார். போர் நிறுத்தத்தை ஊர்ஜிதம் செய்ததுடன், வரும் 12ம் தேதி இரு நாட்டு ரானுவ தளபதிகளும் பொதுவான இடத்தில் சந்தித்து பேசுவர் என்றும் அவர் கூறினார். நேற்று காலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷ்க் தர் ஆகியோருடன் பேசியதாக சொன்னார். போருக்கு முக்கிய காரணகர்த்தாவான பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீருடனும் பேசியதாக தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் மீதான அனைத்து வகை ராணுவ நடவடிக்கைகளையும், நேற்று மாலை 5:00 மணியில் இருந்து நிறுத்திக் கொள்வதாக, நம் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். ''பாகிஸ்தான் ராணுவத்தின், டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல், நம் ராணுவத்தின் டி.ஜி.எம்.ஓ., உடன் பேசினார். ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள பாகிஸ்தான் முன்வந்தது. அதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். படைகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு டி.ஜி.எம்.ஓ.,க்களும், திங்கள் சந்தித்து பேச உள்ளனர்,'' என்றார்.
இதுபோலவே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷ்க் தர், போர் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதை அறிவித்தார். போர் நிறுத்த முயற்சிக்கு உதவிய, 37 நாடுகளுக்கு நன்றி என, அவர் கூறியுள்ளார். ஆனால், இருநாட்டு அமைச்சர்களுமே அமெரிக்காவின் பெயரை குறிப்பிடவில்லை.
இதற்கிடையே, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஏற்கனவே எடுத்த மற்ற முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை என, மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கிடையே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தலைமை தளபதிகள் ஆகியோருடன், பிரதமர் மோடி பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
நடவடிக்கை தொடரும்!
ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. எந்த வகையில், எந்த முறையில் தாக்குதல் நடந்தாலும், அந்த நிலைப்பாடு தொடரும்.--ஜெய்சங்கர்வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,
போர் நிறுத்த முடிவு குறித்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், மத்திய அரசு கூறியுள்ளதாவது:பயங்கரவாதிகள் இனி இந்தியாவில் நாசவேலை செய்தால், அது போர் நடவடிக்கையாகவே எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.பயங்கரவாதிகள் எந்த ஒரு அத்துமீறலில் ஈடுபட்டாலும், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கு, யாருடைய அனுமதியையும் கேட்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. பயங்கரவாதத்தை எந்த நிலையிலும், எந்த அளவிலும் ஏற்க முடியாது. பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருப்பவர்களையும் மன்னிக்க மாட்டோம்.இவ்வாறு மத்திய அரசு கூறியது.
போர் நிறுத்தம் குறித்து, ராணுவம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. கமோடர் ரகு நாயர் கூறியதாவது:தற்போதைக்கு பாகிஸ்தான் மீது எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நம் படைகள் எப்போதும் முழு தயார் நிலையில் உள்ளன. மேலும் தொடர் கண்காணிப்பில் இருக்கும். பாகிஸ்தான் தரப்பில் உடன்பாட்டை மீறினால், தகுந்த பதிலடி கொடுப்போம். இவ்வாறு நாயர் கூறினார். முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூறியதாவது:நம்முடைய எஸ் - 400 என்ற வான்வழி தாக்குதலை முறியடிக்கும் பாதுகாப்பு கவசத்தை தகர்த்துள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது பொய் தகவலாகும். அதுபோல, நம் விமானப்படை தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை அழித்ததாக கூறியுள்ளதிலும் உண்மையில்லை. ஏராளமான பொய்களை சொல்லி உலகின் கவனத்தை திருப்ப பாகிஸ்தான் முயற்சி செய்தது. எதுவும் எடுபடவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

