கடைகளில் சிலிண்டர்கள் அதிகாரிகள் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தாலுகாவில் வீட்டு உபயோக சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்தினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தியாகதுருகம் நகர பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில், வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன், பறக்கும்படை தனிதாசில்தார் வாசுதேவன், குடிமைப்பொருள் தனி தாசில்தார் சரவணன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஒரு டீக்கடை மற்றும் 2 பேக்கரிகளில் வீட்டு சிலிண்டர்கள் பயன்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து 3 சிலிண்டர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடைகளில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

உத்தரவை மீறி மீண்டும் வீட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனர்.

Advertisement