ஐ.டி., துறையில் பணியமர்த்தல் கோவையில் 40 சதவீதம் அதிகரிப்பு

மும்பை:கடந்த ஏப்ரலில் ஐ.டி., துறையில் பணியமர்த்தல் நடவடிக்கை, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, வேலைவாய்ப்பு தளமான 'பவுண்டிட்' வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கோயம்புத்துார் 40 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
பணியமர்த்தல் நடவடிக்கை வளர்ச்சியடைந்ததற்கு, உலகளாவிய திறன் மையங்களின் விரிவாக்கம் முக்கிய காரணமாகும்.
கடந்த, 2024- - 25ம் நிதியாண்டில், இத்துறை 1.10 லட்சம் புதிய தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கி உள்ளது. குறிப்பாக, டேட்டா இன்ஜினியரிங், என்டர்பிரைஸ் ஆர்க்கிடெக்சர் போன்ற பணியிடங்களுக்கு தேவை அதிகரித்து உள்ளது.
ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு மாறுவது, கிளவுட் நவீனமயமாக்கல் மற்றும் தொடர்ச்சியாக உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் ஆகியவை, வேலைவாய்ப்பு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.
கல்வித் தகுதியை விட திறன் அடிப்படையில் பணியமர்த்தல் நடவடிக்கைக்கு, 62 சதவீதம் ஐ.டி., நிறுவனங்கள் முன்னுரிமை அளித்துள்ளன.
கலப்பு வேலை முறை மற்றும் குறைந்த செலவுகள் காரணமாக, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், கோயம்புத்துாரில் 40 சதவீதமும், ஆமதாபாதில் 17 சதவீதமும், பரோடாவில் 15 சதவீதமும், பணியமர்த்தல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
தலைமை அதிகாரிகள், சிறப்பு பணியிடங்கள் பணியமர்த்தலில், மெட்ரோ நகரங்களான பெங்களூரு 9 சதவீதம், மும்பை 9 சதவீதம், டில்லி என்.சி.ஆர்., 7 சதவீதம் வளர்ச்சியுடன் முன்னணியில் உள்ளன.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.