கோடையில் வகுப்புகள் கூடாது; பள்ளிக்கல்வித்துறை

கோவை: தமிழகத்தில், கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. மாணவர்கள் விடுமுறையை பாதுகாப்பாக கழிக்க வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், கோவையில் சில பள்ளிகள், வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக, சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக புகார்கள் வருகின்றன.

தொடர்ச்சியான வகுப்புகள், ஒருவித மன அழுத்தத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் என கல்வியாளர்களும், மனோதத்துவ நிபுணர்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் சூழலில், இது போல் விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்துவது கூடாது என்று எச்சரிக்கிறார், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி.

அவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை மீறி, சில பள்ளிகள் வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் கிடைத்துள்ளன. அப்பேர்ப்பட்ட பள்ளிகள் மீது ஆய்வு செய்து, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement