கிளர்ச்சியாளர்களால் பாகிஸ்தான் கிலி: பலுசிஸ்தான் தனி நாடு என அறிவிப்பு

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு அடுத்த அடியாக, தனி நாடு பிரகடனத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் அறிவித்ததோடு, அரசு அலுவலகங்களில் பாக்., கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றி வருகின்றனர். தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி, இந்தியா மற்றும் ஐ.நா.,வுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது. சமீபத்தில், பாக்., ராணுவத்தினர் சென்ற ரயிலை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்று ஏராளமான பாக்., ராணுவத்தினரை கொன்று குவித்தனர்.
தற்போது இந்தியாவின் தாக்குதல்களால் பாக்., திணறும் சூழலில், பலுசிஸ்தானில், பாக்., ராணுவம் மீது, 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' என்ற கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தலைநகர் குவெட்டா மற்றும் பைசாபாத், சிப்பி, கெச், மஸ்துங், கச்சி உள்ளிட்ட ஏராளமான இடங்களில் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்பதாக, அங்குள்ள 'ஜ்ரும்பேஸ்' என்ற வானொலி தெரிவித்தது.
பலுசிஸ்தான் கொடி
பலுசிஸ்தானின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதோடு, அரசு அலுவலகங்களில் பாக்., கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர். இதையடுத்து, பலுசிஸ்தானை தனி நாடாக கிளர்ச்சியாளர்கள் குழுவினர் அறிவித்து வெளியிட்ட அறிக்கை:
பாகிஸ்தான் சரிவை சந்தித்து வரும் பயங்கரவாத நாடு. எனவே, நாங்கள் சுதந்திர நாடாக பலுசிஸ்தானை அறிவிக்கிறோம். பலுசிஸ்தான் ஜனநாயக குடியரசின் இடைக்கால அரசு விரைவில் அறிவிக்கப்படும்.
அதில், பலுசிஸ்தானை சேர்ந்த பெண்களும் அங்கம் வகிப்பர். எங்கள் நாட்டை அங்கீகரிக்கும்படி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கேட்டுக் கொள்கிறோம். டில்லியில் எங்கள் துாதரகத்தை திறக்க அனுமதிக்கும்படி இந்தியாவை வேண்டுகிறோம்.
பலுசிஸ்தான் ஜனநாயக குடியரசை ஐ.நா., சபை அங்கீகரித்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் புதிய கரன்சி அச்சிடுவதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கச் செய்யும்படி கோரிக்கை விடுக்கிறோம்.
சுதந்திர தினம்
மேலும், பலுசிஸ்தானின் வான், கடல், நிலம் ஆகிய எல்லைக்குள் இருக்கும் ஆயுதங்கள் மற்றும் சொத்துக்களை அப்படியே விட்டு விட்டு, பாக்., படையினரை வெளியேற்றவும், அமைதி காக்கும் படையை அனுப்பி உதவும்படியும் ஐ.நா., சபையை கேட்கிறோம்.
விரைவில் பலுசிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் பேரணி நடைபெறும். அதில், பங்கேற்குமாறு நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்போம்.
பலுசிஸ்தான் மக்களிடம் எங்களுக்கு வலுவான ஆதரவு உள்ளது. தற்போது, இங்கு முகாமிட்டுள்ள பாக்., ராணுவத்தினரை எதிர்கொள்ள சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

