காங்., பாணியில் தலைதுாக்கும் தமிழக பா.ஜ.,கோஷ்டி அரசியல்

2

சென்னை: தலைவர் பதவியை எதிர்பார்த்து கிடைக்காத சிலர், மேலிடத்திற்கு தங்களின் செல்வாக்கை காட்டும் வகையில், தமிழக பா.ஜ.,வில் தனி கோஷ்டியை உருவாக்கி வருகின்றனர். இதனால், இந்நாள் தலைவர், முன்னாள் தலைவர் ஆதரவாளர்கள் என, கட்சியில் பல கோஷ்டிகள் வேகமாக உருவாகி வருகின்றன.

எதிர்பார்ப்பு



இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் பா.ஜ.,வை அனைத்து மட்டத்திலும் வளர்க்கும் முயற்சியில், மேலிடம் தீவிரம் காட்டுகிறது. வரும் சட்டசபை தேர்தலில், 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கிடைக்க வேண்டும் என்றும் மேலிடம் எதிர்பார்க்கிறது.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே, இது சாத்தியம் என்பதை, கடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் உணர்த்தின. எனவேதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக தலையிட்டு, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உறுதி செய்தார்.

இந்த கூட்டணியில் மேலும் ஓரிரு கட்சிகள் இணைய உள்ளன. அந்த கட்சிகளை சேர்ப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை சுமூகமாக நடக்க வேண்டும் என்பதற்காகவே, அனைவரிடமும் மென்மையான போக்கை கடைபிடிக்கும் நயினார் நாகேந்திரனை, தமிழக பா.ஜ., தலைவராக்கியது, டில்லி மேலிடம்.

ஆனால், மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்து கிடைக்காத, ஒரு மூத்த தலைவர், ஒரு முன்னாள் தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு முன்னாள் பொதுச்செயலர், ஒரு மாநில செயலர் ஆகியோர், தங்களுக்கான ஆதரவு கோஷ்டிகளை உருவாக்கி வருகின்றனர்.

மேலிட தலைவர்கள் உடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி, தேசிய அளவில் கட்சி பதவி, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வாரிய தலைவர், இயக்குநர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, தங்களுக்கென தனி ஆதரவு வட்டத்தை உருவாக்கி வருகின்றனர்.

கூட்டணி கட்சி தலைவர்களிடம் அடிக்கடி பேசி, தங்கள் கட்சியின் மேலிட முடிவுகளையும் அவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்கின்றனர். தங்களின் ஆதரவாளர்கள் மத்தியில், மாநில தலைமையை வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர்.

நடவடிக்கை



மத்திய அமைச்சர்கள் மற்றும் மேலிட தலைவர்களை தொடர்புகொண்டு, தங்கள் ஆதரவாளர்களுக்கு மத்திய வாரியங்களில் பதவி வழங்குமாறு கூறுகின்றனர்.

பூசலை உருவாக்கும் வகையில், தனித்தனி கோஷ்டிகளை உருவாக்கும் நிர்வாகிகள் மீது, மேலிடம் ஆரம்பத்திலேயே நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இல்லையேல், தமிழக காங்கிரஸ் கட்சியை போல, மிக சீக்கிரத்தில் பா.ஜ.,வும் மாறி விடும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement