இந்திய ராணுவத்துக்கு எப்போதும் துணை நிற்போம் கவர்னர் ரவி பெருமிதம்

சென்னை:இந்திய ராணுவத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி, கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடந்தது. கவர்னர் ரவி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, முப்படையை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர்.

கவர்னர் ரவிபேசியதாவது:

நம் ராணுவத்திற்கு, மக்கள் துணை நிற்பர்; தமிழக மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் விதத்தில், முதல்வர் ஸ்டாலின் நடத்திய பேரணிக்கு மனமார்ந்த நன்றி.

நம் ராணுவத்துக்கு தமிழகம் எப்போதும் துணை நிற்கும் என்பதற்கு, இந்த பேரணி ஒரு எடுத்துக்காட்டு. பயங்கரவாதத்தை ஊக்குவித்து, அதன் வழியில் ஆட்சி நடத்துகிறது பாகிஸ்தான். பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பாகிஸ்தானிடம் இந்தியா கூறியது. பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.

இதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக, இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்புவதில்லை; அமைதி, அன்பு, சகோதரத்துவத்தைஇந்தியா விரும்புகிறது.

நாம் ஒரு போதும் போரை ஆதரிப்பது கிடையாது. அதே சமயம் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு தகுந்த பாடம் நடத்த வேண்டிய கட்டயம் ஏற்பட்டது. 'ஆப்பரேஷன் சிந்துார்' பதிலடிக்கு நம் நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

எப்போது போர் நடந்தாலும், இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து, ராணுவத்துக்கு பக்கபலமாக செயல்படுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement