2,000 ஏக்கர் வாழை சூறாவளியால் சேதம் 'இன்சூரன்ஸ்' இருந்தும் இழப்பீடு இல்லை

மதுரை:தமிழகம் முழுதும் சில நாட்களாக வீசிய சூறாவளி காற்றால், 2,000 ஏக்கர் பரப்பளவில் குலை தள்ளும் நிலையில் இருந்த, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தன.

இன்சூரன்ஸ் செய்திருந்தாலும், பிர்க்கா அளவில் சேதம் ஏற்பட்டால் மட்டுமே நிவாரணம் வழங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆடிக்காற்றில் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே திசையில் தான் காற்று வீசும். இதனால் வாழை மரங்களுக்கு சேதம் ஏற்படுவதில்லை. சித்திரை சுழி எனப்படும் சித்திரை காற்று ஒழுங்கற்ற முறையில் கிழக்கு, மேற்காக, வடக்கு, தெற்காக நாலாபுறமும் சுழன்று வீசும். இதற்கு வாழைத்தாருடன் குலை தள்ளி நிற்கும் வாழை மரங்கள் தான் முதலில் இரையாகின்றன.

ஒருவாரமாக ஏற்பட்டு வரும் வெப்பசலனத்தால், சூறாவளி காற்றுடன் ஆங்காங்கே மழையும் பெய்கிறது.

இந்த சூறாவளி காற்றில் மதுரை, திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, தென்காசி, திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2,000 ஏக்கரில் வாழை நடவு செய்த விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

ஒரு ஏக்கர் வாழைக்கு, 1,372 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்துகிறோம். ஆனால், பிர்க்கா அளவில் எல்லா விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது.

காற்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் சுழன்றடிக்கும். அந்த லாஜிக் இல்லாமல் விதிகளை உருவாக்கி இழப்பீட்டு தொகை தராமல் விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.

தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், பாதிக்கப்பட்ட தோட்டத்தை போட்டோ எடுத்துச் செல்கின்றனர்; பின்னர் வருவதில்லை. சூறாவளி காற்றால் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வரை அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

சூறாவளியால் விவசாயிகள் தனித்தனியாக பாதிக்கப்பட்டாலும், இன்சூரன்ஸ் செய்திருந்தால் இழப்பீடு தரும் வகையில் சட்டதிருத்தம் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement