கஞ்சா போதை ஆசாமி ஓட்டிய கார் மோதி ஆசிரியை மரணம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே புன்னமூட்டு கடையை சேர்ந்தவர் ஜான் பிரகாசம்; வேன் டிரைவர். இவரது மனைவி பெல்சிட்டாள், 53. இவர், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் தன் டூ - வீலரில் கச்சேரி நடை பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் அதிவேகமாக வந்த கார், பெல்சிட்டாள் டூ - வீலரின் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்ட பெல்சிட்டாள் படுகாயமடைந்தார். அவரது கால் தனியாக துண்டிக்கப்பட்டு, ரோட்டில் விழுந்தது.

மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது, பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த வெங்கஞ்சி அஜின், 30, கொல்லங்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையில் இருந்தது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement