இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்த தான முகாம் 82 இடங்களில் நடக்கிறது

மதுரை : தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு இன்று(மே 11) தமிழகம் முழுவதும் இளைஞர்கள் பங்கேற்கும் மெகா ரத்ததான முகாமை தகவல் தொழில்நுட்பப்பிரிவு நடத்துகிறது.

பழனிசாமி பிறந்தநாளை நாளை(மே 12) அ.தி.மு.க., சார்பில் கொண்டாட திட்டமிருந்தனர். ஆனால் இந்தியா - பாக்., போர் காரணமாக கொண்டாட வேண்டாம் என பழனிசாமி அறிவுறுத்தினார். அதேசமயம் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தேர்தல் பிரசாரமாக பயன்படுத்த கட்சியின் ஐ.டி., பிரிவு திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கியது. மெகா ரத்ததான முகாம் நடத்தப்போவதாகவும், ஆர்வமுள்ள இளைஞர்கள் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவித்தது. ஐ.டி., பிரிவு நிர்வாகிகளே ஆச்சரியப்படும் வகையில் 3 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர்.

இதனால் உற்சாகமடைந்த நிர்வாகிகள், பழனிசாமியின் பிறந்தநாளை ரத்ததான முகாமாக இன்று நடத்துகின்றனர்.தமிழகம் முழுவதும் 82 இடங்களில் நடக்கவுள்ள இம்முகாமில் 25 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களின் விபரங்கள், அவர்களின் பின்னணி குறித்து அறிந்து அவர்களை கட்சி உறுப்பினராக்கி தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த ஐ.டி., பிரிவு திட்டமிட்டுள்ளது.

இதன் செயலாளர் ராஜ் சத்யன் கூறுகையில், ரத்த தான முகாமுக்கு இவ்வளவு பேர் ஆர்வமுடன் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை. இளைஞர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இது தேர்தல் பிரசாரத்துக்கு பலம் சேர்க்கும். இளைஞர்கள் அ.தி.மு.க., மீது ஆர்வம், ஈடுபாடு காண்பிக்கின்றனர் என்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.

Advertisement