திருத்தங்கல் நெற்குத்தி பாறை பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்பு

சிவகாசி: திருத்தங்கல் நெற்குத்தி பாறை பகுதியில் 30 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

திருத்தங்கல் நெற்குத்தி பாறை பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கல் கிடங்கு உள்ளது. மழை பெய்து கல் கிடங்கு நிரம்பிய நிலையில் நகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் இதில் தான் கலக்கின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்பகுதியைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் மருத்துவமனைக்கு அலைகின்றனர். எனவே கல்கிடங்கினை முழுமையாக மூட வேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

லட்சுமி, குடியிருப்புவாசி: மழைக்காலம் மட்டுமல்லாது எப்போதுமே கல்கிடங்கில் கழிவுநீர் தேங்கியுள்ளது. சிறிய மழை பெய்தாலும் கழிவு நீர் வெளியேறி வீட்டுக்குள் வந்து விடுகின்றது. குடியிருப்புகளின் வாசலை ஒட்டி உள்ள இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தினால் குடியிருக்கவே முடியவில்லை. ஒரு வாரத்தில் மட்டும் இப்பகுதியில் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என 30 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்காலிகமாக கொசு ஒழிப்பு பணியாவது இங்கு மேற்கொள்வதோடு உடனடியாக கல்கிடங்கை மூட வேண்டும்.

Advertisement