இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் எதிரொலி; காஷ்மீரில் திரும்பியது இயல்பு நிலை!

7

ஸ்ரீநகர்: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது.


ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை கடந்த 7ம் தேதி அதிகாலை நம் படைகள் தரைமட்டமாக்கின.


இதில் ஆத்திரமடைந்த பாக்., ராணுவம், அன்று இரவே ஜம்மு - காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்கியது. நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன.


இந்நிலையில், இன்று (மே 11) காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது. பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. சில தினங்களாக வெறிச்சோடிய சாலைகளில் தற்போது வழக்கம் போல் வாகனங்கள் செல்ல துவங்கியது. நேற்றிரவு ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.



பஞ்சாப் மாநிலத்தில், பதான்கோட், பிரோஸ்பூர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் இயல்பு நிலை திரும்பியது. சாலைகளில் மக்கள் வழக்கம் போல் நடந்து செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. நேற்றிரவு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.

Advertisement